புதிய உலகம் Banner

நண்பர்களே, புத்தாண்டின் அதிகாலையை ஓர் உரைக்குச் செவிமடுக்க ஒப்புக்கொடுத்திருக்கிறீர்கள், என் பாராட்டுகள். அர்த்தமண்டபத்தின் நிறுவனராகவும், சில தொழில்நிறுவனங்களின் ஆலோசகராகவும் புதிய உலகம் யாருக்கானது? என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

வாய்ப்புகளைக் காண்பவர்களுக்கானது

செருப்பு கம்பெனி துவங்கலாமா என ஆராய ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இருவர் கேஸ் ஸ்டடியை வாசித்திருப்பீர்கள். ஒருவர் சவாலைப் பார்த்தார்; மற்றொருவர் புதிய சாத்தியங்களைப் பார்த்தார். புதிய உலகம் ஒவ்வொரு பிரச்னையிலும் ஒளிந்திருக்கும் வாய்ப்புகளைக் காண்பவர்களுக்கானது.

'சந்தர்ப்பங்கள் காற்றில் மிதக்கின்றன; சாமர்த்தியசாலி மட்டுமே அதை சுவாசிக்கிறான்' — விஜயா வேலாயுதம்

வாடிக்கையாளரை புரிந்துகொள்பவர்களுக்கானது

வளர்ப்பு நாய் உணவு நிறுவனம் முதல் மாதம் மீப்பெரும் விற்பனை பெற்றது; மூன்றாம் மாதம் பத்தில் ஒரு பங்காியது. காரணம்: நாய்களுக்கு அந்த உணவு பிடிக்கவில்லை. மனிதர்கள் விற்கப்படுவதை விரும்புவதில்லை; வாங்கவே விரும்புகிறார்கள். வாடிக்கையாளரின் தேவையைத் தெரிந்துகொண்டு சரியான தீர்வைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவுவதே இந்த நூற்றாண்டின் வணிகம்.

வணிக அறத்தோடு செயல்படுபவர்களுக்கானது

நூறாண்டுகளைத் தாண்டிய இந்திய நிறுவனங்களின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாக 'Business with Ethics' இருக்கும். இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்குகிறவர்கள் ஓர் எல்லைக்கு மேல் வெல்ல முடியாது. வணிகத்துக்கு எல்லை உண்டு; வணிக அறத்துக்கு எல்லையே கிடையாது.

விரிவடையும் விசாலம் கொண்டவர்களுக்கானது

திருப்பூரில் Pioneer ஆக செல்போன் தொழில் தொடங்கிய நண்பர்களை பிற்காலத்தில் வந்த நிறுவனம் வென்றெடுத்தது. Scaling எண்ணம் இல்லாததும், காலத்துக்கேற்ப மாறாததும் தொழிலை அழித்துவிட்டது. 'இது போதும்' எனும் எண்ணம் தொழிலில் உருவாகும் போது நம் நிறுவனத்திற்கான பூட்டை நாமே தயார் செய்ய ஆரம்பிக்கிறோம்.

Excellence நோக்கிச் செல்பவர்களுக்கானது

Power of Paper Folding உங்களுக்குத் தெரியுமா? ஒரு காகிதத்தை 42 தடவை மடித்தால் அதன் உயரம் பூமிக்கும் நிலவுக்குமான தூரம். மனிதவளத்தையும் முதலீட்டையும் பெருக்கிக்கொண்டே சென்றால் சாத்தியம் அளவிட முடியாதது. இறைக்கிற கிணறுதான் ஊறும், இறைக்காத கிணறு நாறும்.

நமது தலைமுறையின் கடமை

நாம் வாழ்வது Startup யுகம். Smartphone, இணையம், தொழில்கட்டமைப்பு கொண்ட நாம் நமது முன்னோர்களின் சாதனைகளில் பாதியைக் கூட எட்டவில்லை. எங்களது தோள் மீது ஏறி எத்தனைத் தொலைவு நீங்கள் செல்லப்போகிறீர்கள் என்று நமது மூதாதையர்கள் நம்மை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

"இறைவா, யதார்த்தத்தைக் காணும் கண்ணும், அதை உள்வாங்கிக் கொள்ளும் அறிவும், யதார்த்தத்தை உடைத்து புது சரித்திரத்தைப் படைக்கும் ஆற்றலையும் எமக்கு அருளப் பண்ணுவாயாக."

— 01-01-2026 அன்று 'Action Takers Community' தொழில் முனைவர்களுக்காக செல்வேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கமான வடிவம்